பொது வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது இனி ரொம்ப ஈஸி

முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கான காலக்கெடு ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வருங்கால தேவைக்காகவும், முதுமைக் காலத்திற்கு அவசியம் என்பதற்காகவும் மத்திய அரசால் 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF ACT), 1959ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Certificate) மற்றும் 1873ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட வங்கி சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் ஆகியவை.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (PPF) முதலீடு செய்தால் குறைந்த பட்சம் 15 வருடங்களுக்கு பணத்தை எடுக்க இயலாது. நம்முடைய மருத்துவ செலவுகளுக்கும் அவசர தேவைக்கும் இடைப்பட்ட காலங்களில் திரும்ப பெற முடியாத சூழ்நிலையே தற்போது வரையிலும் உள்ள நிலையாகும். கூடவே இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி என்பது 8 சதவிகிமாகவே உள்ளது.

மூன்று வருட காத்திருப்புக்கு பின்பு (Lockin Period) முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்ற உத்திரவாதத்துடன், வரி விலக்குடன் கூடிய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் (ELSS) முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் வருமானம் என்பது பொது வருங்கால வைப்பு நிதியின் மூலம் கிடைக்கும் வருவாயை விட மிக மிக அதிகமாகும். கூட்டு வட்டி (Cumulative Interest) என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுவதால், இதன்மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் என்பது குறைந்த பட்சம் 12 சதவிகிம் முதல் 15 சதவிகிதம் ஆகும்,

இதன் காரணமாகவே பொது வருங்கால வைப்பு நிதித் (PPF) திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பெரும்பாலான பொது மக்களும் மாத சம்பளதாரர்களும் விரும்புவதில்லை. இதன் காரணமாகவே பொது வருங்கால வைப்பு நிதியில் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு முன்வந்தது.

2016ம் ஆண்டில் பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. அதில் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ள பணத்தை, முதலீடு செய்த தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் கணக்கை முடித்து, தங்களின் மருத்துவ செலவுகளுக்காகவும், தங்கள் வாரிசுகளின் கல்வி செலவிற்கும் 1 சதவிகித வட்டியை கழித்து திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதித்தது. மேலும் முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை ஏழு வருடங்களுக்கு பின்பு திரும்ப எடுத்துக் கொள்ள வழி செய்தது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பொது சேமிப்பு திட்டங்களில் இருந்து முதலீட்டை அவசர தேவைக்கு திரும்ப எடுப்பதற்காக அனைத்து சேமிப்பு திட்டங்களையும் ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் சிறு சேமிப்பு திட்டங்களாக இணைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளிவர இருக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள்:

அவசர நிதித் தேவைகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் திரும்ப எடுத்துக் கொள்ளும் சலுகையுடன், கீழ்வரும் சலுகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன

சிறுவர், சிறுமிகளுக்கு (Minor) அவர்களின் காப்பாளர்கள் (Guardian) வருங்கால வைப்பு நிதியிலும், பிற சேமிப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். சிறுவர், சிறுமியர்களும் தங்களின் வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும்.

குறைகளையும் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் குறை தீர்ப்பு அமைப்பு (Ombudsman) ஏற்படுத்தப்படும்.

இந்த திட்டங்கள் சட்ட வல்லுநர்களின் அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களின் பரிந்துரைகள் மற்றும் முன்மொழியும் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் ஒப்புதல் கிடைத்தவுடன், திட்டம் அமல்படுத்தப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment