இன்று முழு அடைப்பு போராட்டம் 50% அரசு பஸ், ஆட்டோ, கால்டாக்சி, லாரிகள் ஓடாது

65 லட்சம் கடைகள் மூடப்படும் * மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ, கால்டாக்சி மற்றும் லாரிகள்  ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.  தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா, மதிமுக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  முழு அடைப்பு போராட்டத்தில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 1.40 லட்சம் பேரில் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.மாநிலம் முழுவதும் 2.35 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணி, ‘’ முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்து  சென்னையில் இன்று 82 ஆயிரம் ஆட்டோக்களும், தமிழக அளவில் 2.35 லட்சம் ஆட்டோக்களும் ஓடாது’’ என்றார்.தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறும்போது, ‘’பெட்ரோல், டீசல் விலையால் லாரி தொழில் முடங்கியுள்ளது. நாளை நடக்கும் போராட்டத்தையொட்டி தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள்  ஓடாது’’ என்றார். 
தமிழ்நாடு கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹூசைன் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து நாளை(இன்று) நடக்கும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.  சென்னையில் 30 ஆயிரம் கால்டாக்சிகளும், தமிழகம் முழுவதும் 2 லட்சம் கால் டாக்சிகளும் நாளை(இன்று) ஓடாது’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 65 லட்சம் கடைகள் மூடப்படும் என பேரவை தலைவர் வெள்ளையன்  தெரிவித்துள்ளார். பஸ், ஆட்டோ, கால்டாக்சி, லாரி என அனைத்து போக்குவரத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் இன்று தமிழகமே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று 60 சதவீதம் அரசு பஸ்கள் இயங்காது என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  அதேபோல் எதிர்கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பிலும் இன்று ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இன்று வாரத்தின் முதல்நாள் என்பதால் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கும். முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம்  செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாவார்கள்.

* தமிழகம் முழுவதும் 1.40  லட்சம் பேரில் 70 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில்  பங்கேற்பார்கள்.
* மாநிலம் முழுவதும் 2.35 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment