ஒப்பந்த பயிற்சி அப்பரண்ட்டிகளை நேரடி உற்பத்தியில் இருபடுத்தக்கூடாது

Image result for chennai courtஒப்பந்த ஊழியர்கள், பயிற்சியாளர்கள், அப்ரண்டீஸ் கள் ஆகியோரை ஆலைகளில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பெரும்புதூர் தாலுகா மண்ணூர் கிராமத்தில் செயல்படும் எம்யெங் ஷைன் இந்தியா ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 150 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர். 550 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு நேரடி உற்பத்தி பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள், பயிற்சி தொழிலாளர்கள், அப்ரண்டீஸ் எனப்படும் தொழில் பழகுநர் ஆகியோரை நிர்வாகம் ஈடுபடுத்தி வருகிறது. இது தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாகும். மேலும் தொழிற்சாலைகளில் விபத்துக்களுக்கும் அது இட்டுச்செல்லும். இதுகுறித்து ஏற்கனவே பிரச்சனை எழும் போதெல்லாம் தொழில் பாதுகாப்பு பிரிவு இணை இயக்குநர் தலையிட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்தவேண்டும் என்று கூறியும் நிர்வாகம் அதை கடைப்பிடிக்கவில்லை.
எனவே, தொழிலாளர் தொடர்பான சட்டங்களை கறாராகப் பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு, காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், திருபெரும்புதூர் தொழிலாளர் நலத்துணை ஆணையர், எம்யெங் நிறுவனத்தின் நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா, தொழிற் சாலையின் மஸ்டர் ரோலில் இடம்பெறாத ஒப்பந்த ஊழியர்கள், பயிற்சி ஊழியர்கள், தொழில் பழகுநர் ஆகியோரை ஆலையின் நேரடி உற்பத்தி பணிகளில் ஈடுபடுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து ஆலையின் நிர்வாகம் 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் சிஐடியு சார்பில் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதிட்டார்.

No comments:

Post a Comment