சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயல்படும் கொதிகலன் இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், தீபாவளியையொட்டி தொழில் நிறுவனங்களிடம் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அப்புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதல் கட்ட விசாரணை செய்தனர். விசாரணையில், சில அதிகாரிகள் தீபாவளியையொட்டி, தொழில் நிறுவனங்களை மிரட்டிப் பணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை மாலை அந்த அலுவலகத்துக்குள் சோதனை செய்ய அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு கொதிகலன் இயக்குநர் எஸ்.சக்திவேல் இருந்துள்ளார்.
சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில், அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு அதிகாரியின் காரில் இருந்து மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரூ.3.14 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல அவரது அலுவலக அறையில் இருந்து ரூ.17 ஆயிரமும், மற்றொரு அதிகாரி அறையில் இருந்து ரூ.15 ஆயிரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.",
No comments:
Post a Comment