
நாடு முழுவதும் உள்ள பி.எப்., மாவட்ட அலுவலகங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஒவ்வொரு ஆண்டும், விருது வழங்கப்படுகிறது. புதிய தொழிலாளர் இணைப்பு, நிலுவை தொகை வசூல்; நடப்பு ஆண்டுக்கான பி.எப்., தொகை வசூல், மாவட்ட அலுவலக செயல்பாடு உட்பட பல்வேறு வகை அம்சங்களை மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், நடப்பு ஆண்டு, நாட்டின் சிறந்த மாவட்ட பி.எப்., அலுவலகம் என்கிற விருது, திருப்பூருக்கு கிடைத்துள்ளது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட பி.எப்., உதவி கமிஷனர் விஜய்ஆனந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவாரிடமிருந்து, விருது பெற்றுக்கொண்டார்.
பி.எப்., உதவி கமிஷனர் விஜய் ஆனந்த் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டு, 70 ஆயிரம் தொழிலாளர், புதிய பயனாளராக சேர்க்கப்பட்டுள்ளனர்; 41 ஆயிரம் பேரின் ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பென்ஷன்தாரர்களில், 10 ஆயிரம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 117 பி.எப்., மாவட்ட அலுவலகங்கள் உள்ளன. எல்லாவகையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்துக்கு, நடப்பு ஆண்டு, சிறந்த அலுவலகம் விருது மற்றும் அலுவலகத்தை மேம்படுத்த, ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment