ஒரே நாடு, ஒரே சம்பள தினம்: மத்திய அரசு திட்டம்

புதுடில்லி: முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 'ஒரே நாடு, ஒரு சம்பள தினம்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.இது குறித்து, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேசியதாவது: பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க, ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய, அரசு திட்டமிட்டு வருகிறது. பணியில் பாதுகாப்பு, உடல்நலம், ஊதியம் ஆகியவற்றில், விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட, கடுமையான சட்ட திட்டங்களை மத்திய அரசு விதித்துள்ளது.

மேலும், தொழிலாளர் நல சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில், 2014 முதல், இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.இந்நிலையில், முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 'ஒரே நாடு, ஒரே சம்பள நாள்' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment