புற்றுநோய் தலைநகர் ஈரோடு: தனியாரால் 1.50 கோடி பேர் பாதிப்பு

சாய, தோல் கழிவுகளை, காவிரியாற்றில் வெளியேற்றும் ஈரோடு மாநகரம், தமிழகத்தின் புற்றுநோய் பாதிப்பு தலைநகராக உருவெடுத்து வருகிறது. இப்பகுதியில் செயல்படும், 200 நிறுவனங்களால், 1.50 கோடி பேரை ஆட்சியாளர்கள் அழித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஈரோடு சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், ஈரோடு மட்டுமின்றி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களும், கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக, ஈரோடு மாநகர மக்கள், புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக பெருநகரங்களில் உள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகளில், நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் அனுமதிக்கப்பட்டால், 'நீங்கள் ஈரோட்டில் இருந்து வருகிறீர்களா' என, கேட்பது சாதாரணமாகி விட்டது. இம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆலையிலும், சிப்காட் போன்ற இடங்களிலும், அகற்ற முடியாத தன்மை கொண்ட அடர்கழிவு மட்டும், பல லட்சம் டன் தேங்கி கிடக்கிறது.இதன் மீது, மீண்டும் மீண்டும் அடர்கழிவு கொட்டப்படுவதால், அந்த கழிவுநீர், மழை நீருடன் கலந்து, பூமிக்குள் இறங்கி, சுற்றுவட்டார நீராதாரங்களில் நஞ்சு கலந்து விடுகிறது. இந்த தண்ணீரை தான், இம்மாவட்ட மக்கள் அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பல ஆயிரம் மீட்டர் சாய துணிகளை, காவிரி ஆறு, காலிங்கராயன் வாய்க்காலில் அலசி, உலர்த்தி எடுத்துச் செல்கின்றனர்.அதேபோல், தோல் ஆலைகளில், தோலை பதப்படுத்தி மாற்றும் போது, அதில் சேர்க்கப்படும் உப்பை உதறி, அலசி எடுத்து செல்வர். பதனிடும் போது, அவற்றுடன் காரீயம் உட்பட பல வேதி பொருட்களை சேர்க்கின்றனர்.இக்கழிவுகள், தோலுடன் இருந்த உப்பு போன்றவற்றை லாரிகளில் கொண்டு வந்து, காவிரி உட்பட நீர் நிலைகளில் கொட்டிச் செல்கின்றனர் அல்லது குழி வெட்டி அவற்றில் கழிவு, உப்பை போட்டு செல்கின்றனர். அவை அப்படியே நிலத்தடி நீருடனும், நீர் நிலைகளிலும் கலக்கின்றன.

நொய்யலாக மாறும் காவிரி : சாதாரணமாக மனிதர்கள் குடிக்கும் நீரில், உப்பின் அளவு, 'டோட்டல் டிசால்வ்டு சால்ட்' எனும் டி.டி.எஸ்., 600 வரை, இருக்கலாம். ஆறு ஆண்டுகளில், ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நீர் நிலை ஆய்வில், 3,000 டி.டி.எஸ்., அளவுக்கு, பல இடங்களில் உப்பின் அளவு உள்ளது. 'மும்பை, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்' உட்பட பல அமைப்புகள் சேர்ந்து, 2016 ஜூலை, 17ல் வெளியிட்ட அறிக்கையில், 'ஈரோட்டில் பல இடங்களில், 2,000 டி.டி.எஸ்.,சுக்கு மேல் தண்ணீரில் உப்பு தன்மை உள்ளது' என தெரிவித்துள்ளது. தவிர, 'கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என பல வேதி பொருட்கள், 30 முதல், 100 மடங்கு அதிகமாக உள்ளன' எனவும் குறிப்பிட்டுள்ளது. இவை, புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. திருப்பூரில் இருந்து திறந்து விடப்பட்ட சாய ஆலை கழிவால், நொய்யல் ஆற்றில், 12 ஆயிரம், டி.டி.எஸ்., அளவுக்கு உப்பு தன்மை இருந்ததால், திருப்பூரில் உள்ள பல ஆலைகளை இடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நொய்யல் ஆறு அடைக்கப்பட்டு, இன்று வரை பயனற்று போனது. அதே போல, காவிரி ஆறும், காலிங்கராயன் வாய்க்காலும், ஈரோடு பகுதியின் நிலத்தடி நீரும் மாறி வருவது, மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

விதிகளை மீறி : காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் கூறியதாவது: கடந்த, 14 ஆண்டுகளாக, சாய, சலவை, தோல் கழிவுநீர் வெளியேற்றம் கட்டுக்கடங்காமல் உள்ளது. கழிவு நீரை திறந்தால், அனுமதி இன்றி செயல்பட்டால், ஆலையை இடிக்கின்றனர்; மின் இணைப்பை துண்டிக்கின்றனர். ஒரே வாரத்தில், அதே இடத்தில், அதே ஆலை, வேறு பெயரில் செயல்படுகிறது. அந்த அளவுக்கு இத்தொழிலில் முறைகேடாக செயல்பட்டால், லாபம் கிடைக்கிறது.தனி நபர்கள், பல கோடி ரூபாய் சம்பாதிப்பதற்காக, 1.50 கோடி மக்களின் குடிநீர், நிலத்தடி நீரை விஷமாக்குகின்றனர். உள்ளூர் அமைச்சர், கலெக்டரிடம் புகார் செய்தால், 'எங்கும் சாயக்கழிவு வெளியேறவில்லை' என்கின்றனர். அப்படியானால், எதற்காக ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டம், 75 லட்சம் ரூபாயில் சுத்திகரிப்பு நிலையம், 720 கோடி ரூபாயில், அரசு சார்பில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கின்றனர் என்பதை விளக்க வேண்டும்.விதிகளை மீறி சாயப் பட்டறைகளை இயக்குவோரை, குறைந்த பட்சம் குண்டர் தடுப்பு சட்டம் அல்லது 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கும்படி தண்டனையை கடுமையாக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள, 200 யூனிட்காரர்களை பார்க்காமல், பல கோடி மக்களை நினைத்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

10 ஆண்டுகளில் 295 மருத்துவமனைகள் : மாவட்டத்தில், நிலத்தடி நீர், குடிநீர், காற்று ஆகியன மாசு பட்டுள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஈரோடு பகுதியில் மட்டும், பதிவு செய்யப்பட்ட, 295 மருத்துவமனைகள், 780 மருந்துக் கடைகள் செயல்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.