சீனாவில் சாய ஆலைகளுக்கு நெருக்கடி திருப்பூருக்கு, 'ஆர்டர்' அதிகரிக்க வாய்ப்பு

சீனாவில் சாய ஆலைகள் மூடப்படுவதால், அங்கு செல்ல வேண்டிய, 'ஆர்டர்'கள் திருப்பூர் நோக்கி வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உலகளாவிய ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், சீனாவின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு, சீனா, மிகப்பெரிய போட்டி நாடாக இருந்து வருகிறது. சீன நிறுவனங்கள், குறைந்த செலவில் ஆடை தயாரித்து, குறைந்த விலைக்கு சந்தைப்படுத்து கின்றன. அதை எதிர்கொண்டு, ஆர்டர்களை பெறுவது, நம் நாட்டு ஆயத்த ஆடை துறையினருக்கு, பெரும் சவாலாக உள்ளது.சோதனைதற்போது, சீன ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை, இயற்கைக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதில், துணிகளுக்கு சாயமேற்றும் சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்களும் அடங்கும். அந்நாட்டில், சாயக்கழிவு நீரை முழுமையாக சுத்திகரிக்கும் கட்டமைப்புகள், இதுவரை உருவாக்கப்படவில்லை.
இதுவே, தற்போது அந்நாட்டு ஆடை உற்பத்தி துறைக்கு சோதனையை ஏற்படுத்திஉள்ளது.கடந்த, 2011ல், திருப்பூர் சாய ஆலை துறையினரும் இதுபோன்ற நெருக்கடியை சந்தித்தனர். ஆனால், சாயக்கழிவு நீரை, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கி, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி விட்டனர்.
அதனால், சீனாவுக்கு ஏற்பட்டுள்ள சோதனை, திருப்பூருக்கு சாதகமாக மாறிஉள்ளது.பின்னலாடை துறை ஆலோசகர் கிரீஷ் கூறியதாவது:திருப்பூரில் மட்டும் தான், சாய தண்ணீரை முழுமையாக சுத்திகரிக்கும், பூஜ்ய சுத்திகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. சீனாவில், 377 சாய ஆலைகளை மூடுவதற்கு, அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. 25 சதவீத வளர்ச்சி இதனால், அந்நாட்டுக்கு ஆர்டர் வழங்கி வரும் வர்த்தகர்கள், திருப்பூர் பக்கம் தங்கள் கவனத்தை திசை திருப்ப, வாய்ப்புள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை, பின்னலாடை துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் அமைப்புகள், திருப்பூரின் தொழில் கட்டமைப்புகள், பெருமைகளை வர்த்தகர்கள் மத்தியில் கொண்டு சென்று, ஆர்டர்களை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். சீனா வசம் உள்ள, 1 சதவீத ஆடை வர்த்தக சந்தையை கைப்பற்றினாலே போதும், நம் ஆடை வர்த்தகத் துறையில், 25 சதவீத வளர்ச்சியை எட்டி விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.