திவால் நிறுவனத்தில் முதலீடு... கோடிக்கணக்கான பி.எஃப் பணத்தின் கதி என்ன?!

பி.எஃப் நிறுவனம், தனது முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்திருந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனம் தற்போது ஏறக்குறைய திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டுக்கான லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை, அசலுக்கே மோசம் ஏற்பட்டுள்ளது.

நிர்வாக மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட தனியார் உட்கட்டமைப்பு நிறுவனம் ஐ.எல் & எஃப்.எஸ். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களின் பணத்தில் சுமார் 15,000 முதல் 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் குறிப்பாகச் சம்பளதாரர்களை அதிகம் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
ஐ.எல் & எஃப்.எஸ் என்றழைக்கப்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (IL&FS) என்ற தனியார் நிறுவனம், இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும். எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, யு.ஐ.ஐ மற்றும் என்.ஐ.சி உள்ளிட்ட நான்கு பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்துவரும் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வந்தது. சாலைகள், ரயில்வே பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், தொழிற்சாலைகள் என இந்நிறுவனம் செயல்படுத்திய திட்டங்களின் மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும். 
பி எஃப்
நிதிச் சிக்கலில் மாட்டிய ஐ.எல் & எஃப்.எஸ்
இந்த அளவுக்கு இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறையில் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்த ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனம், தற்போது அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கவே தள்ளாடிக்கொண்டு, ஏறக்குறையத் திவால் நிலையை எட்டியுள்ளது. வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கடன் வாங்கி, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ஐஎல் அண்ட் எஃப்எஸ் கடன் வழங்கியிருக்கிறது. தற்போது இந்தக் கடன்கள் திரும்ப வராததால், சிக்கலில் மாட்டியிருக்கிறது.
இந்தியாவில் 121, வெளிநாடுகளில் 52 துணை நிறுவனங்கள் எனச் சுமார் 90 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ள ஐ.எல்&எஃப்.எஸ் குழுமம் பெற்றிருக்கும் மொத்தக் கடன் தொகை சுமார் ரூ.91,000 கோடிக்கு மேல். பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த நிறுவனம் கடன் வழங்கியிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்தக் கடனைக் கொடுத்தது ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம். இப்படித் தந்த கடனானது திரும்ப வராமல் போக, வாங்கிய பணத்தைத் திருப்பித் தரமுடியாத சிக்கலில் மாட்டியிருக்கிறது ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம். இதில் வங்கிகளில் வாங்கியது மட்டுமே ரூ.57,000 கோடி. கடந்த சில மாதங்களில் ரூ.12,000 கோடி மதிப்பிலான கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. சிறு தொழில் வளர்ச்சி வங்கியான சிட்பி (Small Industries Development Bank of India - SIDBI) யிடம் வாங்கிய ரூ.1000 கோடி ரூபாய் கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியவில்லை. வணிகப் பத்திரங்கள் மீதான தொகையையும் தரவில்லை. இவற்றுக்கெல்லாம் பின்னரே இந்நிறுவனத்தின் நிதி நிலைமை திவாலாகும் கட்டத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்ட வணிகப் பத்திரங்களுக்கான தொகை (Commercial paper), முதிர்வு நாளுக்குப் பிறகும் திரும்ப வழங்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிறுவனம் சந்தையில், வணிகப் பத்திரம்மூலம் நிதி திரட்டக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தச் செய்தி வெளியாகத் தொடங்கியவுடன் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாகக் குறையத் தொடங்கி,   இந்தப் பங்கின் விலை கடும் சரிவுக்குள்ளானது. 
இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை, `AAA’-விலிருந்து `AA+’ என்கிற அளவுக்குத் தரமிறக்கம் செய்தது `இக்ரா’ ரேட்டிங் ஏஜென்சி. அதன் பின்னர், இந்த ரேட்டிங்கானது மேலும் பல படிநிலைகள் குறைக்கப்பட்டு `BB’ என நிர்ணயிக்கப்பட்டது. தர நிர்ணய நிறுவனங்களால் வழங்கப்படும் ரேட்டிங் வரிசையில் `BB’ என்பது முதலீடு செய்யும் தகுதிநிலைக்கும் கீழானதாகும். இந்த நிலையில் தற்போது, இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் கிரைசில் ஆகிய இரு தர மதிப்பீட்டு நிறுவனங்களுமே, இந்த நிறுவனத்தின் ரேட்டிங்கை `D' அல்லது default (கடனைத் திரும்பச் செலுத்த தவறிய நிறுவனம்) என்ற நிலைக்குத் தரமிறக்கி உள்ளது. 
ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனம் - பி எஃப்
ஆனாலும், ``திவால் எல்லாம் ஆகவில்லை. பணத் தட்டுப்பாட்டில்தான் இருக்கிறோம். அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுத்தால் தற்போதுள்ள பணத்தட்டுப்பாட்டைச் சமாளித்துவிட முடியும்” என்று சொல்லி சமாளிக்கிறது ஐ.எல்&எஃப்.எஸ்
நிர்வாக மோசடியும் காரணம் 
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குப் பங்குகளைத் தேர்வு செய்வதில் நீண்ட நெடிய அனுபவம் மற்றும் தொழிற்முறை திறன் இருந்தாலும், கடனை ஆய்வு செய்வதில் அதே திறமை இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. மத்திய ரிசர்வ் வங்கியின் கடுமையான கண்காணிப்பின்கீழ் பணியாற்றும் வங்கிகள், தனியார் நிறுவனங்களுக்குத் தரும் கடனையே திரும்ப வசூல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் தினசரிப் பணப் பரிவர்த்தனைகள்மீது வங்கிகளுக்கு இருக்கும் கண்காணிப்பும், கட்டுப்பாடும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு இல்லை.  
மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடுகள் பெரும்பாலும் இக்ரா, க்ரைசில், கேர் போன்ற தர நிர்ணய நிறுவனங்கள் வழங்கும் ரேட்டிங்கின் அடிப்படையிலேயே, அதுவும் குறிப்பாக, AA-க்குமேல் ரேட்டிங் உள்ள நிறுவனங்களிலேயே செய்யப்படுகின்றன. என்றாலும்கூட, இந்தக் கடன் நிச்சயம் திரும்ப வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஐ.எல்&எஃப்.எஸ் குழுமம் வெளியிட்ட கடன் பத்திரங்களில் எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்றாலும், 12 மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.3,500 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் சொல்கிறது. 
இந்த நிலையில் கடன் சிக்கலிலிருந்து மீள்வதற்காக, தனக்குச் சொந்தமான சொத்துகளை விற்றும், போட்டி நிறுவனங்களுடன் கம்பெனியை இணைத்து கடன் சுமையைக் குறைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்தச் சூழலில் ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ரவி பார்த்தசாரதி, உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி, கடந்த ஜூலை 20-ம் தேதியன்று ராஜினாமா செய்தார். 
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம், உதய் கோடக் தலைமையில் 6 பேர் கொண்ட புதிய இயக்குநர் குழுவை அமைத்துள்ளது. முன்னாள் ஐசிஐசிஐ வங்கித்தலைவர் ஜி.சி சதுர்வேதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், டெக் மஹிந்திரா தலைவருமான வினித் நய்யார், முன்னாள் செபி தலைவர் ஜி.என்.பாஜ்பேய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மாலினி சங்கர், நந்தா கிஷோர் ஆகியோர் இயக்குநர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தின் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது நிர்வாகக் குளறுபடிகள்தான். துணை நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதிலும், திட்டங்களை முடிப்பதிலும் சரியாகக் கவனம் செலுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் நிதி அறிக்கைகளிலும், நிர்வாகத்திலும் மோசடிகள் நடந்ததாகப் பல்வேறு புகார்கள் செபி, ரிசர்வ் வங்கி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு வந்துள்ளன. 
பி.எஃப் பணத்தில் இழப்பு
பி.எஃப் பணத்தில் ஏன் இழப்பு? 
இந்த நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐ.எல் & எஃப்.எஸ் குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் பணத்தில் சுமார் 15,000 முதல் 20,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  
நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வுக் கால நலன் கருதி, அவர்களின் சம்பளப் பணத்திலிருந்து பி.எஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டு, அந்தப் பணம் பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் லாபமே பி.எஃப் சந்தாதாரர்களுக்கு அவர்களின் சேமிப்புத் தொகைக்கு ஏற்ப வட்டியாக வழங்கப்படுகிறது. 
அந்த வகையில் பி.எஃப்  நிறுவனம், தனது முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்திருந்தது. அதேபோன்று ஓய்வூதியதாரர்களின் பணமும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்களின் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்ட பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி), என்.எஸ்.சி எனப்படும் தேசிய சேமிப்புத் திட்டம், எஸ்.சி.எஸ்.எஸ் எனப்படும் மூத்தக் குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் போன்ற அரசு சார்ந்த சேமிப்புத் திட்டங்களிலிருந்தும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 
இதில் பி.எஃப் முதலீடுகளில் பெரும்பாலானவை ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு, கடனாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த நிறுவனம் தற்போது ஏறக்குறைய திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டுக்கான லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை, அசலுக்கே மோசம் ஏற்பட்டுள்ளது. பி.எஃப் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு இதில் முதலீடு செய்யப்பட்டது என்பது குறித்த சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை. பொதுவாக பிராவிடன்ட் பண்ட் மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளும் நிறுவனங்கள், தங்களது முதலீட்டு விவரங்கள் மற்றும் வருவாய் அல்லது இழப்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. இருப்பினும் ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தில் செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் ஓய்வூதிய முதலீட்டில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அனலிஸ்ட்டுகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் தொகை சுமார் 91,000 கோடி ரூபாய்க்கும் மேல் எனச் சொல்லப்படும் நிலையில், இதில் 61 சதவிகிதம் யெஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, இண்டஸ்இந்த் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்குக் கொடுக்க வேண்டியவை. 33 சதவிகிதம் கடன் பத்திரங்கள் மற்றும் கமர்சியல் பேப்பர்களுக்கானவை என செபியில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், பி.எஃப் மற்றும் ஓய்வூதியத் திட்ட பணம் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த துல்லியமான தகவல் இல்லையென்ற போதிலும், ஐ.எல் & எஃப்.எஸ் குழுமத்தின் கடன் பத்திரங்களில் 40 சதவிகிதத்தை பி.எப் நிறுவனம் வைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.   
தாமதமாகலாம்... வராமல் போகாது!
இந்த நிலையில், இது குறித்து பிரபல நிதி ஆலோசகர் ராஜசேகரனிடம் பேசியபோது, ``ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த 
ராஜசேகரன்
தொகை திரும்ப வருவதில் தாமதம் ஏற்படலாமே தவிர, அந்தத் தொகை வராமலேயே போகாது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த நிறுவனம் சாலை அமைத்தல் போன்ற, தான் எடுத்துச் செய்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பணம் வராமல் தாமதமாகி இருக்கலாம். அல்லது அதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேக்க நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இவையெல்லாம் சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால், முதலீட்டுப் பணம் எப்படியும் திரும்ப வந்துவிடும். வேண்டுமானால், பி.எஃப் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் குறையலாம்" என்றார்.

பொதுவாகத் தனியார் நிறுவனக் கடன்/நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்வது ரிஸ்க் அதிகம் கொண்டது. அரசு வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு வட்டி சற்று குறைவு என்றாலும், முதலுக்கு மோசம் இருக்காது. எனவே, பி.எஃப் போன்ற நிறுவனங்கள், தாங்கள் செய்யும் முதலீட்டுத் தொகை பொதுமக்களுக்கானது என்பதை மறக்காமல் முதலீட்டு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்!

No comments:

Post a Comment