சூப்பர் ஸ்பெஷாலிடி’ சிகிச்சை பெற இஎஸ்ஐ 6 மாதம் கட்டினால் போதும்!புதுடெல்லி: இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான குறைந்த பட்ச பங்களிப்பு காலம் 2 ஆண்டில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் அரசு காப்பீடு சட்டத்தின்படி, நோயுற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை அளிக்க இஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாதம் ரூ.21,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கான பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் குடும்பத்தினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். நோயின் தன்மை, தீவிரம் கருதி இதனுடன் இணைந்த பிற மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இஎஸ்ஐ காப்பீட்டில் சேர்ந்த தொழிலாளர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு குறைந்த பட்சம் இந்த திட்டத்தில் 2 ஆண்டு பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனை 6 மாதமாக குறைத்து இஎஸ்ஐ வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 6 மாத இஎஸ்ஐ பங்களிப்பு அளித்தவர்களுக்கு நவீன சிகிச்சை வசதிகள் இலவசமாக கிடைக்கும். தொழிலாளர்களை சார்ந்து வாழும் தாய், தந்தை, மகன், மகள் ஆகியோருக்கு மாத சம்பள வரம்பு ரூ.5,000 ஆக இருந்தது. இது ரூ.9,000 ஆக உயர்த்தப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல், இஎஸ்ஐயுடன் இணைந்த மருத்துவமனைகளில் இஎஸ்ஐ காப்பீட்டில் சேர்ந்துள்ள தொழிலாளர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் இஎஸ்ஐ ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்போது சிகிச்சை செலவில் 8ல் 7 பங்கு செலவை இஎஸ்ஐயும், ஒரு பங்கு செலவை அந்தந்த மாநில அரசுகளும் ஏற்கின்றன. இந்த புதிய சலுகைகளால் பல லட்சம் தொழிலாளர்கள் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மாத சம்பளம் ரூ.21,000 வரை உள்ள தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் பங்களிப்பு தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.


 இந்த திட்டத்தில் தொழிலாளர்கள்  சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற குறைந்த பட்சம் 2 ஆண்டு இஎஸ்ஐ பங்களிப்பு கட்டாயம் என இருந்தது. இது தற்போது 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.


 இஎஸ்ஐயுடன் இணைந்த பிற மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்வோரின் சிகிச்சை செலவை இஎஸ்ஐ முழுமையாக ஏற்கும்.


 தொழிலாளர்களை சார்ந்து வாழ்வோர் இந்த திட்டத்தில் பலன் பெறுவதற்கான அவர்களது சம்பள உச்சவரம்பு ரூ.5,000ல் இருந்து ரூ.9,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment