இ.எஸ்.ஐ., மருந்தக அதிகாரிகளுக்கு.. அதிர்ச்சி வைத்தியம்! பனியன் நிறுவன HR தடாலடி

திருப்பூர் இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது; மருந்தக செயல்பாடு மீதான தங்கள் அதிருப்தியை, பின்னலாடை தொழிலாளர்கள் கொட்டி தீர்த்தனர்.திருப்பூரில், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில், குறைகேட்பு கூட்டம், நேற்று நடந்தது.

திருப்பூர் கிளை மேலாளர் பழனிசாமி, கே.என்.பி.,புரம் கிளை மேலாளர் காமேஷ்வர் துபேஜி, தணிக்கையாளர் குமார், அவிநாசி மருந்தக பொறுப்பாளர் பிரியா, திருப்பூர்--2 மருந்தக பொறுப்பாளர் யோகேஷ்வரி ஆகியோர், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர் குறைகளை கேட்டனர்.கிளை மேலாளர் பழனிசாமி பேசுகையில், ''நிறுவனங்களில் பணியில் இணையும் தொழிலாளர்களை உடனடியாக, இ.எஸ்.ஐ.,ல் சேர்க்கவேண்டும். இ.எஸ்.ஐ.,யின் நன்மைகள், தொழிலாளர் பலருக்கும் தெரியவில்லை; என்னென்ன நன்மைகள் என தெரிந்தால், தொழிலாளர்கள், ஆர்வமுடன் இ.எஸ்.ஐ.,யில் இணைவர்.நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இ.எஸ்.ஐ.,ல் இணைய செய்ய வேண்டும் என்றார். தொழிலாளர் தங்கள் குறைகளை தெரிவித்தால், தீர்வு காணப்படும்,'' என்றார்.குறைகளுக்கா பஞ்சம்?பனியன் நிறுவன, மனிதவள அலுவலர்கள் கூறிய கருத்துகள்: தொழிலாளர், இ.எஸ்.ஐ.,ல் இணைய விரும்பாத போதும், விதிமுறைப்படி அவர்களை இணைக்கிறோம். மருத்துவ தேவைக்காக, தொழிலாளர்கள் மருந்தகங்களை நாடும்போது, போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை.


மருந்தகங்களில், பெரும்பாலான நேரங்களில், டாக்டர்கள் இருப்பதே இல்லை. மருத்துவ உதவி கிடைக்காத தொழிலாளர்கள், நிறுவனங்களில் வந்து, எங்களிடம் வெறுப்பை வெளிப்படுத்து கின்றனர். பெண் தொழிலாளி, சொந்த ஊரில் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்; அங்கேயே சிகிச்சை பெற்றுள்ளார். கூடுதல் சிகிச்சைக்காக, திருப்பூரில் உள்ள மருந்தகத்தை அணுகினார். ஒரு டாக்டர், 'இங்கு ஏன் வந்தீர்கள்? ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறவேண்டியது தானே,' என்று கூறியதோடு, தொழிலாளி கொடுத்த, சிகிச்சை விவரம் அடங்கிய பைலையும், துாக்கி போட்டுள்ளார். தொழிலாளர்களும், மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து நடந்துகொள்ளுங்கள். மருந்தகங்களில், மருத்துவர்கள், பொறுப்பாளர்கள், தொழிலாளர்களிடம், கடுகடுப்பாக நடந்து கொள்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறவேண்டியுள்ளது.புதிதாக பதிவு செய்வதற்கு, மருந்தகங்களை நாடும் தொழிலாளர்களை, அலைக்கழிக்கின்றனர்; இரண்டு மூன்று நாட்கள் அலையவேண்டியுள்ளதால், தொழிலாளர் சம்பளத்தை இழக்கின்றனர். கோவை சென்று, கையெழுத்து பெற்று வந்தால் மட்டுமே, திருப்பூரில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை கொடுக்கின்றனர்.

இவ்வாறு, சரமாரியான தாக்குதலுக்கு உரிய பதிலளிக்க முடியாமல், இ.எஸ்.ஐ., அதிகாரிகள் தடுமாறினர். 'மருந்தகங்களில், 5 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்; பணிச்சுமையே, கடுகடுப்புக்கு காரணமாக இருக்கலாம்.உங்கள் குறைகளையெல்லாம் குறிப்பெடுத்துள்ளோம்; துரிதமாக அவற்றை நிவர்த்தி செய்து வைப்போம்,' என்று ஏதோ கூறி சமாளித்தனர்.பிளாஸ்டிக் பொருள் தடைஇ.எஸ்.ஐ.,க்கு இல்லையா?தமிழகத்தில், கடந்த ஜன., 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பொருள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள், தனியார் அனைவரும், பிளாஸ்டிக் மாற்று பொருட்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.ஆனால், திருப்பூர், இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பலகாரம் மற்றும் டீ வழங்கப்பட்டது. இவை அனைத்தும், ஒரு முறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் தட்டு, டம்ளரில் வழங்கினர்.சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும், தமிழக அரசு தடை செய்தும்கூட, பிளாஸ்டிக் பிளேட், கப் பயன்படுத்துவது,

இ.எஸ்.ஐ., அதிகாரிகளின் அலட்சியத்தையும், சமூக பொறுப்பின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டியது.முதலில், இந்த அதிகாரிகளுக்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், இ.எஸ்.ஐ., அதிகாரிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது; மறைமுகமாக, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடக்கிறதோ? என்கிற சந்தேகம் சரியாக எழுகிறது.

No comments:

Post a Comment