அமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது

அமெரிக்கா-சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளின் பின்னலாடை வர்த்தகர்கள் தங்களின் பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் ஆர்டர்கள் குவியும் என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 4400 கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் மூண்ட வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகரித்ததால் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.

கொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல.. ஐ -ய மிஸ் பண்ணின ஆஸ்திரேலியா.. கரன்சி நோட்டில் பிழையாம்

நீயா நானா வா மோதிப்பாக்கலாம்

வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் விதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியது. குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டில் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியதுடன், அந்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்யும் முதலீடுகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

உறவில் விரிசல்

இதனால் எரிச்சலடைந்த சீனாவும் பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரியை உயர்த்தியது இதனால் இரு நாட்டு அரசியல் மற்றும் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. வர்த்தக உறவை சரிசெய்யும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஒரு ஆண்டாகவே பேச்சு வார்த்தை நடைபெற்ற வந்தது,

முறுக்கிக்கொண்ட அமெரிக்கா

பேச்சு வார்த்தை நடைபெறும்போதே, இடையில் முறுக்கிக்கொண்ட அமெரிக்கா, சீனா உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஆகவே வேறு வழியில்லாததால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இறக்குமதி வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்து சீனாவுக்கு எரிச்சலூட்டினார்.

அதிர்ஷ்ட காற்று இந்தியா பக்கம்

இரு வல்லரசு நாடுகள் வர்த்தக சண்டையில் தீவிரமாக இறங்கிவிட்டதால், இரு நாடுகளிலும் உள்ள இறக்குமதியாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து தங்கள் வர்த்தகத்திற்கு எப்போதும் சாதகமாக இருக்கும் இந்தியாவின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பினர். இந்திய ஜவுளி வகைகள் குறிப்பாக பின்னலாடை பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ரூ.30000 கோடி ஆர்டர்

பின்னலாடைப் பொருட்கள் உற்பத்தியில் திருப்பூர் முன்னிலையில் உள்ளதால், இறக்குமதியாளர்கள் இங்கிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். இதனால் நடப்பு ஆண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஆர்டர்கள் குவியும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 4400 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆர்டர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் ரூ.4400 கோடி

அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வர்ததகப் போர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது குறித்து இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி அமைப்பின் (India International Knit Fair) தலைவரும் பின்னலாடை ஏற்றுமதியாளருமான ஏ.சக்திவேல் கூறும்போது, உலகளவில் பின்னலாடை தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் திருப்பூர், நடப்பு நிதயாண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 4400 கோடி ரூபாய்க்கும் கூடுதலான பின்னலாடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிக்கும்

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 26 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இன்னும் அதிகரித்து சுமார் 30 ஆயிரம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூருக்கு அதிக பயன்

அண்டை நாடான சீனாவும் அமெரிக்காவும் போட்டி போட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்திருப்பது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக திருப்பூருக்கு அதிக பயனைப் பெற்றுத் தந்துள்ளது என்று கூறலாம். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்திய ஜவுளிப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

தேவை தாராள வர்த்தக ஒப்பந்தம்

ஜவுளி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான பருத்தி, பாலியஸ்டர் மற்றும் செயற்கை நூலிழை உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதோடு இந்திய ஜவுளித்துறை, சர்வதேச அளவில் போட்டிகளை சமாளித்து வர்த்தகம் நடக்க துணை புரிகிறது. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பு (Europeon Union) நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

ஜவுளி ஏற்றுமதிக்கு சிறப்பான எதிர்காலம்

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருமானால் ஐரோப்பிய நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும். அதேபோல், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் ஜவுளி ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியடையும் என்றும் சக்திவேல் கூறினார்.

சர்வதேச கண்காட்சி

சர்வதேச அளவிலான ஏற்றுமதியாளர்களை கவரும் வகையில் ஆண்டு தோறும் சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதில் பின்னலாடை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் துணைப்பொருட்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறுவது வழக்கம்.

நடப்பு 2019ஆம் ஆண்டில் வரும் 15ஆம் தேதி சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவங்குகிறது. இதில் சர்வதேச அளவில் சுமார் 90 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பின்னலாடைகள், பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப்பொருட்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment