திருப்பூரில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த வங்கதேசத்தினர் கைது எதிரொலியாக, திருப்பூரில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை போலீசார் கணக்கெடுக்க முடிவு செய்துள்ளனர். திருப்பூர் வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி பகுதியில் பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேச இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாடகை வீட்டில் வசித்து வந்த வங்கதேச இளைஞர்கள் சுமன் (21), மன்ஜிருல்ஹக் (24), அப்துல்கலாம் (31), கோகன் (30), டோலன் உசேன் (21), சோஜிபைதர் (27), முக்தார் மியா (35) , சோஸிப் மியா (31), ஆசிக் (25) , லால்மியா (25), கபீர் உசேன் (30).நொசுரூல் (23), ஷாமின் (21), ஹபிபுர் (25), குகோன் (25), ரபிகுன் இஸ்லாம் (50), ஜயிதுல் (17), பிஜாய், ஜஹாங்கிர் ஆசன் (40), ஆசிக் (25) ஆகிய 19 பேரை உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வங்கதேசத்தில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்கத்தா வழியாக உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்கு வேலை தேடி வந்ததும், அனைவரும் போலியான பெயர்களை கூறி, சிறுபூலுவப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தின் முகவரி கொண்ட ஆதார் அட்டைகளை வைத்திருந்தனர். போலீசாரின் ஆய்வில், அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 19 பேரையும் போலீசார் கைது செய்து, திருப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அனைவரையும் சென்னை கொண்டு சென்று புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி 19 பேரும் சென்னை கொண்டு செல்லப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூரில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர, நைஜீரியா, வங்கதேசம், நேபாள நாட்டை சேர்ந்தவர்களும் தங்கியுள்ளனர். திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள கமிஷனர் அலுவலகம் அருகே பனியன் நிறுவனத்தில் போலி ஆவணங்களுடன் வங்க தேசத்தினர் சிக்கியதுபோல  திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் மேலும் சில வங்கதேசத்தினர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால், திருப்பூரில் உள்ள அனைத்து பனியன் நிறுவனங்கள், நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் வேலை செய்து வரும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment