வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி... சோதனை முயற்சியில் உற்பத்தி திறன் அதிகரிப்பு

உற்பத்தி திறன் அதிகரிப்பு... எல்லா நாட்களுக்கும் ஊதியம் பெற்று கொண்டு, வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்த சோதனை முயற்சியின்போது, உற்பத்தி திறன் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் ஜப்பான் கிளை தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளும் ஊதியத்தோடு கூடிய விடுமுறை வழங்கப்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதிகபட்சமாக 30 நிமிடங்களே அலுவலகக் கூட்டங்கள் நடைபெற வேண்டுமென கட்டுப்பாடும் போடப்பட்டிருந்தது.

நேரடியாக பார்த்து கலந்துரையாடுவதைவிட ஆன்லைன் மூலம் கலந்துரையாடும்படி கூறப்பட்டது. உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும். கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஜப்பானிலுள்ள சுமார் 25 சதவீத நிறுவனங்களின் ஊழியர்கள், வேலை நேரம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு 80 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்வது தெரிய வந்தது. இந்த அதிக நேர வேலைக்கு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.

2019 கோடைக் காலத்தில் நடந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வெர்க் லைஃப் சாயிஸ் சேலஞ்ச் ஆய்வுக்கு பின்னர், அந்த நிகழ்வே மிகவும் பிரபலமாகிவிட்டது. இதில் 92% மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பங்கெடுத்தனர். ஒரு மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 2018 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில், மின்சார பயன்பாடு 23 சதவீதமும், தாளில் அச்சிடுவது 59 சதவீதமும் குறைந்துவிட்டது என்று மைக்ரோசாஃப் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு குளிர்காலத்தில் இரண்டாவது வெர்க் லைப் சாயிஸ் சேலஞ்சை செயல்படுத்த திட்டமிடுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த முறை சிறப்பு விடுமுறையை வழங்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால், ஊழியர்கள் நன்றாக ஓய்வு எடுத்துகொள்ள ஊக்கமூட்டப்படுவர் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment