அபார வெற்றி! உப்பின்றி சாயமேற்றும் டெக்னிக் :காப்புரிமை பெற தீவிர முயற்சி

திருப்பூர்:பல்வேறு சோதனைகளை கடந்து, குமாரபாளையம் பிரபாகரனின் கண்டுபிடிப்பான, உப்பு இன்றி சாயமேற்றும் தொழில்நுட்பம் வெற்றிபெற்றுள்ளது.பவானி அருகேயுள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். சாய ஆலை தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், இன்குபேஷன் மையத்தின் உதவியுடன், உப்பு இன்றி சாயமேற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டு பிடித்துள்ளார். 
உப்புக்கு பதில், எவ்வித சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாமல், சாயங்களை, துணியில் ஏற்ற வைக்கும் ஒரு பொருளை உருவாக்கியுள்ளார்.இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. குறைவான விலை, குறைந்தளவு தண்ணீர் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தாமை என, இன்குபேஷன் மைய விஞ்ஞானிகள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும், இப்புதிய தொழில்நுட்பத்தில் உள்ளது.
சர்வதேச அளவில், சாயமேற்றுதல் தொழில்நுட்ப மாநாடு, கடந்த 14, 15ம் தேதிகளில் மும்பையில் நடந்தது.உள்நாடு, வெளிநாடுகளைச்சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி மற்றும் குமாரபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் பங்கேற்று, உப்பு இன்றி சாயமேற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர்.இப்புதிய தொழில்நுட்பத்துக்கு, மாநாட்டில் பங்கேற்ற சாயத்துறை சார்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் வரவேற்பு அளித்துள்ளனர். அனைத்து வகை சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து, அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:சாதாரண சாயமேற்றும் தொழில்நுட்பத்தைவிட, இப்புதிய பொருளை பயன்படுத்தும்போது, தண்ணீர் பயன்பாடு மிகவும் குறைகிறது. வெளியேறும் கழிவுநீரின் டி.டி.எஸ்., அளவும் கட்டுப்படுகிறது. வழக்கமான சாயமேற்றுதலில், வெளியேறும் சாயநீரின் டி.டி.எஸ்., 1.25 லட்சம் டி.டி.எஸ்., அளவில் இருக்கும். 
ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் சாயமேற்றும்போது, கழிவுநீரின் டி.டி.எஸ்., வெறும் 25 ஆயிரமாக உள்ளது.இதனால், மிக எளிதாகவும், குறைந்த செலவில், இந்த சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கமுடியும். சாயமேற்றுவதற்காக உப்புக்கு பதில் சேர்க்கப்படும் இந்த பொருளை தயாரிப்பதற்கான செலவும் மிக குறைவாகவே உள்ளது.
மும்பை மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு விஞ்ஞானிகளும், இந்த தொழில்நுட்பத்தை பாராட்டினர்; உலகளாவிய சாய ஆலை துறையில் இப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். சாய ஆலை துறையினருக்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.காப்புரிமை பெற்ற பின், அந்த தொழில்நுட்பம் குறித்த அனைத்து விவரங்களும், கண்டுபிடிப்பாளரின் அனுமதியுடன் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment