நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த மாநிலம் எது? வெளியான ஆய்வு முடிவுகள்! 'ஷாக்' தந்த தமிழகம்

நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த மாநிலம் ராஜஸ்தான் என்று புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறது. மொத்தம் 1,90,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த முடிவுகளும் இப்போது வெளியாகி இருக்கின்றன.

அதன் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் ஊழல் அதிகம் மிகுந்த மாநிலம் என்று பெயர் பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 78 சதவீதம் பேர் ஊழல் மலிந்து கிடப்பதாக கூறியிருக்கின்றனர். லஞ்சம் கொடுத்தால் தான் தங்களின் வேலை நடப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

22 சதவீதம் பணம் கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் வேலை நடக்கிறது என்றும், 56 சதவீதம் பேர் ஒருமுறை அல்லது 2 முறை பணம் கொடுத்தால் தான் காரியத்தை முடிக்க முடிகிறது என்றும் கூறியிருக்கின்றனர்.

வெறும் 22 சதவீதம் பேர் எந்த பணமும் கொடுக்காமல் வேலை நடக்கிறது என்று கூறி உள்ளனர்.

2வது இடத்தில் பீகார் மாநிலம் இருக்கிறது. 75 சதவீதம் பேர் ஊழல் இருக்கிறது என்றும், 50 சதவீதம் பேர் பலமுறை லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் ஒருமுறையும், 25 சதவீதம் பேர் பணம் கொடுக்காமலும் இருந்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் பரபரப்பில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலம், நாட்டிலேயே ஊழல் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. 73 சதவீதம் பேர் பணம் கொடுத்தால் தான் வேலையாகிறது என்றும், 13 சதவீதம் பேர் எந்தக்காசும் கொடுக்காமல் பணி நடக்கிறது என்றும் கூறி உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது உ.பி. இந்த மாநிலம், 4வது இடத்தில் இருக்கிறது. 74 சதவீதம் பேல் லஞ்சம் கொடுத்திருக்கின்றனர் என்றும், அவர்களில் 57 சதவீதத்தினர் பலமுறை பணம் தந்திருக்கின்றனர் என்றும் கூறி இருக்கின்றனர். 17 சதவீதம் பேர் ஒரு முறை பணம் கொடுத்து இருப்பதாகவும், வெறும் 3 சதவீதத்தினர் பணமே கொடுத்தது இல்லை என்றும் கூறி உள்ளனர்.

5வது இடத்தில் இருப்பது தெலுங்கானா. நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க 67 சதவீதம் பேர் பணம் கொடுத்திருக்கின்றனர். அவர்களில் 56 சதவீதத்தினர் பலமுறை பணம் தந்திருக்கின்றனர். வெறும் 11 சதவீதத்தினர் ஒருமுறையோ அல்லது 2 முறையோ லஞ்சம் கொடுத்திருக்கின்றனர். எந்த பணமும் இல்லாமல் பணிகள் நடைபெற்று இருப்பதாக 11 சதவீதத்தினர் கூறி உள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஊழல் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 63 சதவீதம் லஞ்சம் கொடுத்திருக்கின்றனர் என்றும், அவர்களில் 27 சதவீதம் பேர் பலமுறையும், 36 சதவீதத்தினர் ஒன்றோ அல்லது இரண்டு முறையோ லஞ்சம் கொடுத்திருக்கின்றனர் என்று கூறி இருக்கின்றனர். 27 சதவீதம் பணமே கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றனர்.

7வது இடம் கர்நாடகாவுக்கு. 63 சதவீதத்தினர் பணம் கொடுத்தும், அவர்களில் 35 சதவீதத்தினர் பலமுறையும் லஞ்சம் தந்திருக்கின்றனர். 9 சதவீதம் பேர் எந்த லஞ்சமும் கொடுக்காமல் பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளனர்.

கடைசியாக 8வது இடம். இந்த இடத்தில் இருப்பது தமிழகம். கிட்டத்தட்ட 62 சதவீதத்தினர் லஞ்சம் கொடுத்ததாக கூறி உள்ளனர். அவர்களில் 35 சதவீதத்தினர் பல முறை பணம் தந்திருப்பதாகவும், 27 சதவீதம் பேர் ஒருமுறையோ அல்லது 2 முறையோ பணம் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வெறும் 8 சதவீதத்தினர் மட்டுமே பணமே தராமல் பணிகள் முடிந்துள்ளதாக கூறி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment