புதிய தொழில் நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு சோதனை ஓட்டம்!:


திருப்பூர்:புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திருப்பூர் சாய ஆலை துறையினர், சாயக்கழிவை குறைந்த செலவில் சுத்திகரிக்க முடியும்; இதற்கான சோதனை ஓட்டம் நடத்தி பார்க்க வேண்டும்.

திருப்பூர் ஆடை உற்பத்தி துறையின் மிக முக்கிய அங்கமாக உள்ளது, சாய ஆலை துறை. உற்பத்தி செய்யப்படும் துணிக்கு, ரசாயனங்களை பயன்படுத்தி இந்த ஆலைகள், சாயமேற்றுகின்றன. சாயமேற்றியபின் வெளியேறும் கழிவுநீர், 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் மூலம், ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

ஏராளமான நிலைகளைக்கொண்ட சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்காக, திருப்பூர் சாய ஆலை துறையினர் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய நியூகேஸ்டல் பல்கலை, புதிய வகை சாயக்கழிவு சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த பல்கலை பேராசிரியர்கள் அஜயன் வினு, தவமணி ஆகியோர், திருப்பூர் வந்துள்ளனர். இருவரும் பங்கேற்ற நவீன சாயக்கழிவு சுத்திகரிப்பு தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம், சபாபதிபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர் சங்க அரங்கில் நடந்தது.

ஆஸி., பல்கலை கழக பேராசிரியர் தவமணி பேசியதாவது:3டி டைட்டானியம் எலக்ட்ரிக் ரியாக்டர் மூலம், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கும்போது, கழிவுநீரின் நிறம் மற்றும் டி.டி.எஸ்., அளவு வெகுவாக குறைந்துவிடுகிறது. அதனால், தற்போது நடைமுறையில் உள்ள, முதல் கட்ட சுத்திகரிப்பு; உயிரியல் சுத்திகரிப்பு மற்றும் பில்ட்ரேஷன் படிநிலைகள் தவிர்க்கப்படும்.

ரியாக்டரில் கழிவுநீரை செலுத்தி, வெளியேறும் நீரில், மிதக்கும் கசடுகளை நீக்கியபின், மிக குறைந்த டி.டி.எஸ்., உள்ள நீர் கிடைக்கும். இதனை நேரடியாக, எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிப்புக்கு அனுப்பவேண்டும். இந்த சுத்திகரிப்பு முறையை நடைமுறைப் படுத்தும்போது, சுத்திகரிப்பு செலவினங்கள் மிகவும் குறையும்.புதிய சுத்திகரிப்பு கட்டமைப்பு களை உருவாக்குவதற்கு, தற்போது சுத்திகரிப்பு மையங்கள் இயங்கும் நிலத்தின் அளவில், பத்தில் ஒருபங்கு போதுமானது.


உயிரியல் கழிவுகள் உற்பத்தியாவதில்லை; மற்ற கழிவுகளும் மிக குறைந்தளவே வெளியேறு கின்றன.திருப்பூர் சாய ஆலை துறையினர்,புதிய சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி, சோதனை ஓட்டம் செய்து பார்க்க வேண்டும்; இதன்மூலம், சரியான இறுதி முடிவை எட்டமுடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment